அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிலக்கும் ‘அசானி’ தீவிரப்புயல்!

அசானி தீவிரப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அசானி புயல் காரணமாக ஆந்திர, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், தமிழகத்தின் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அசானி தீவிரப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அசானி தீவிர புயல், தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கே தெற்கே சுமார் 200 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.” என்று தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அசானி தீவிர புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு வெகு அருகில் வந்து, வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். பின்னர் 24 மணிநேரத்தில் புயலாக வலுவிலக்கும் என்றார்.

அசானி புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனிடையே, புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 113 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, ஆந்திரா மாநிலத்திலும் கடலோரப் பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ தொலைவில் அசானி புயல் தற்போது நிலவுகிறது என்றும் அசானி புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா நோக்கி நகரும் அசானி புயல் பின்னர் ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை புரசைவாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்ககம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.