டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமாவை ஏற்க கூடாது: குமாரசாமி

விதிமீறலாக இடமாற்றம் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநில போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்கக் கூடாது என, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:

தலித் சமுதாயத்தை சேர்ந்த ரவீந்திரநாத், நேர்மையான அதிகாரி. போலியான ஜாதி சான்றிதழ் கொடுத்து, அரசு பணியில் அமர்ந்த பெரிய பெரிய திமிங்கலங்களை வலையில் விழ வைத்தார். அரசு மற்றும் சமுதாயத்துக்கு, மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க முயற்சித்தார். போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, பதவியில் அமர்ந்த குற்றச்சாட்டை சுமந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பிய பத்தே நாட்களில், நோட்டீஸ் அளித்த அதிகாரியையே துாக்கி அடித்துள்ளனர். யாருக்கு ஆதரவாக, அரசு வேலை செய்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

குற்றவாளி இடத்தில் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி, காங்கிரஸ் அரசில் உள்துறையின் ஆலோசகராக இருந்தவர். ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருந்தவருக்கு, மிகவும் நெருக்கமானவர். இத்தகையவருககு நோட்டீஸ் அளித்த ரவீந்திரநாத்தை இடம் மாற்றியுள்ளனர்.

இவ்விஷயத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உள் ஒப்பந்தம் என்ன? ஒரு தலித் அதிகாரியை, பலிகடாவாக்க மேற்கொண்டுள்ள திட்டம் இதுவாகும். ஆப்பரேஷன் தாமரை மூலம், பா.ஜ., அரசு அமைய ஒத்துழைப்பு கொடுத்த தலைவருக்கு, நெருக்கமாக இருந்த ஓய்வு பெற்ற அதிகாரி மீது, கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நபரை காப்பாற்ற அரசுக்கு என்ன அவசியம் வந்தது. எங்கிருந்து, யார் நெருக்கடி கொடுத்தனர் என்பது, மக்களுக்கு தெரிய வேண்டும். விதிமீறலாக இடமாற்றம் செய்ததையும், பணியாற்ற இடையூறு ஏற்பட்டதற்கும் ஆட்சேபம் தெரிவித்து மாநில போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.