10 ஆண்டுகளில் தி.மு.க. அழியும் என்று சாபமிடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு தேர்தலின் மாநில தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய், துணைத்தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின்கரை சனல், அஞ்சலி நிம்பால்கர், தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் வருகிற ஜூன் 10-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். ஆகஸ்டு முதல் வாரத்தில் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒரு பெண் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வதன் பொருள் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் போதே அவரை அப்புறப்படுத்திவிட்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதல்ல. அவர் எப்படி அண்ணா ஆட்சியை அமைப்பதில் முயற்சியாக இருக்கிறாரோ, அதேபோன்று நாங்கள் காமராஜர் ஆட்சி அமைப்பதில் முயற்சியாக இருப்போம்.
பா.ஜ.க.வினர் வாய்ச்சொல் வீரர்கள். பா.ஜ.க.வினரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜி.எஸ்.டி. கொள்கை, தவறான விவசாய கொள்கை காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி காலத்தில்தான் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. எனவே, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை திருத்திக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை போன்று தி.மு.க.வும் அடுத்த 10 ஆண்டுகளில் அழியும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாபமிடுகிறார். அடுத்த தேர்தலிலாவது அண்ணாமலை நின்று வெற்றிபெற வேண்டும் என்பது எனது விருப்பம். முதலில் அவர் வெற்றி பெறட்டும், அதன்பிறகு அவரது கட்சி வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.