திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா!

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோட்டையான திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் பிப்லப் தேப் குமார். முதலமைச்சராக பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்து தேசிய ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியவர் பிப்லப் தேப் குமார். 4 ஆண்டுகால ஆட்சிப்பொறுப்பை நிறைவு செய்த இவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலுக்காக தயாராகி வந்தார்.

இந்த நிலையில் இவருக்கும் மாநில பாஜக மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை எனத் தெரிவித்து வந்தனர். அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் பலர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் தேசிய தலைமையின் அதிருப்திக்கும் ஆளானார் பிப்லப் தேப் குமார். கட்சி சார்ந்தும், ஆட்சி சார்ந்தும் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும், சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவிக்கும் கருத்துக்களால் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பாஜக தேசியத் தலைமையிடம் புகார்களை அடுக்கி வந்தனர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடனும் பிப்லப் தேப் குமார் நல்லுறவை தொடரவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான அமித்ஷாவை பிப்லப் தேப் குமார் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தையும் திரிபுரா மாநில ஆளுநரிடம் வழங்கி இருக்கிறார். இன்றே திரிபுராவின் புதிய முதலமச்சர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என திரிபுரா மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் நிதானமான முடிவுகளை எடுக்கும் மூத்த தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.