வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வர முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் இலவச தையல் பயிற்சி மையம் சேலம் 5 ரோடு மெய்யனூர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தையல் பயிற்சி மையத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது மக்களுக்கு பெரிய சுமை. தி.மு.க. அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. விவசாயிகள் பாதிக்ககூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு வேளாண் மண்டலம் கொண்டு வந்தது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் அமைக்க முடியாது. மு.க.ஸ்டாலின் நினைத்தாலும் டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை கொண்டு வர முடியாது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை கொண்டு வரப்போவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதல்-அமைச்சர் முயல்கிறார். இதன்மூலம் பாமர மக்களையும், படித்தவர்களையும் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்புமாக தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது.
ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இதை நம்பி 16 லட்சம் அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால் அரசு ஊழியர்களை நம்ப வைத்து தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது. அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியம் இல்லை.
நிதி ஆதாரத்தை பெருக்க எந்த திட்டமும் இல்லை. கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.290 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட், தற்போது ரூ.490 ஆக உயர்ந்து உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.32 ஆயிரமாக இருந்த ஒரு டன் கம்பி தற்போது ரூ.92 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
எட்டுவழிச்சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்திற்கும் சாலைகள் அவசியம் எனவும், எட்டு வழி சாலை திட்டத்தை அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தது. ஆனால் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தியது. ஆனால் தற்போது எட்டு வழி சாலை திட்டம் நல்ல திட்டம் என திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஓராண்டு கால ஆட்சி திமுக கூட்டணி கட்சிகளும் தற்போது எட்டு வழி சாலை திட்டம் சம்பந்தமாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசிற்கு நல்ல திட்டங்கள் எவையும் இல்லை.
ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரம் வாழ முடியாத அளவில்தான் உள்ளது. வீட்டு வரி உயர்வு திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்குள் வீட்டு வரி 100 மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் இனி வரி கட்ட வேண்டும் என்ற திமுக அரசின் செயல்பாடு மக்களை மேலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். எதையும் சரிப்படுத்தாத ஒரு அரசாக திமுக அரசு ஓராண்டு ஆட்சி செய்து வருகிறது என விமர்சனம் செய்தார். கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நூறு மடங்கு உயர்ந்துள்ளது. முக்கியமாக கட்டுமான தொழிலை நம்பி இருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை வரும்போது, அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர், நிச்சயமாக அதனை உயர்த்துவார்கள். ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பஸ் கட்டணம் உயரும், மின் கட்டணமும் உயர்த்தப்படும். காரணம் அதுவும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பால் விலையையும் உயர்த்தப்போகின்றனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.