சரத்பவாருக்கு எதிராக அவதூறு பரப்பி மலிவு விளம்பரத்தைப் பெறலாம் என்பதை மகாராஷ்டிர பா.ஜ.க.விடம் இருந்து நடிகை கேதகி சிதாலே கற்றுக் கொண்டிருப்பார் என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மராத்தி நடிகை கேதகி சிதாலே வேறு நபர் எழுதியது எனக்கூறி முகநூலில் சரத்பவார் குறித்து அவதூறு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் ‘நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்’, ‘நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடிகையின் முகநூல் பதிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். சரத்பவார் குறித்து அவதூறு பரப்பிய நடிகையை கைதுசெய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது அவதூறு பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கல்வா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக தானே குற்றப்பிரிவு போலீசார் நடிகை கேதகி சிதாலேயை கைது செய்தனர்.