நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர்

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் கல்குவாரியில் பாறை விழுந்த நிலையில் அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் பகுதியில் அந்த தனியார் கல்குவாரி உள்ளது. 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு 6 பேர் விழுந்த நிலையில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இங்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.

மேலே இருக்கும் பாறைகள் உடைந்து அப்படியே குவாரி உள்ளே விழுந்துள்ளது. மழை காரணமாக இந்த பாறைகள் உடைந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் நேற்று இங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வது கடினம் ஆனது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து தற்போது ராட்சச கிரேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கிரேன்கள் குவாரி உள்ளே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது போக தற்போது கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. கிரேன்கள் மூலம் சிலரை மீட்க முடியவில்லை என்பதால் தூத்துக்குடியில் இருந்து கடலோர காவல்படை மீட்பு பணியில் இறங்கி உள்ளது. அவர்களின் ஹெலிகாப்டர் தற்போது சம்பவ இடத்தில மீட்பு பணிகளை செய்து வருகிறது. கயிறு மூலம் கடலோர காவல்படையினர் கீழ் இரக்கப்பட்டு உள்ளனர். குவாரிக்குள் கயிறு மூலம் அவர்கள் இறக்கப்பட்டு உள்ளனர்.

அங்கிருந்து பாறைகளில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்டு மீண்டும் ஹெலிகாப்டர் கயிறு மூலம் அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர். உள்ளே சிக்கி இருக்கும் இன்னொருவர் விரைவில் மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மீதம் இருக்கும் மேலும் மூன்று பேரை உயிரோடு மீட்க வாய்ப்பு குறைவு என்று தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருந்த லாரி மீது பாறை மொத்தமாக விழுந்துவிட்டது. 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் இருந்துள்ளன. இதில் 6 ஊழியர்கள் மழைக்காக ஒதுங்கி உள்ளே இருந்துள்ளனர். கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் இருந்த கிட்டாச்சிக்கு மேலே பாறைகள் விழுந்துள்ளன. இதை பார்த்து சுதாரித்து வெளியேற வரும் முன் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோர் இருந்த லாரி மீது பெரிய பாறைகள் விழுந்துள்ளன. இதில் அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான காயங்கள் காரணமாக இவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சுவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 300 அடி பள்ளம் என்பதால் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட இருவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நேற்று (14.5.2022) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் (முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார்) சிக்கியுள்ளனர். அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். மேலும், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.