மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 இடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வருகிற 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கும்போது 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுகவுக்கு கிடைக்கவுள்ள 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் திமுகவினர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த வைத்திலிங்கம் ஒரு ஆண்டு பதவி இருந்த நிலையில் ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடத்துக்கு நடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த ராஜேஷ்குமார் தேர்வானார். மிக குறைந்த காலமே அவர் எம்.பி.யாக இருந்ததால், அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கும் வகையில் ஒரு இடத்தை அவருக்கு திமுக கொடுக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதேசமயம், கட்சியின் சீனியர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களது பெயர் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.