வானில் இருந்து பறந்து வந்து குஜராத்தில் விழுந்த இரும்பு பந்துகள்!

வானில் இருந்து பறந்து வந்த பந்து வடிவிலான பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விண்வெளியில் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கினற்ன. இதுகுறித்து தினமும் உலகம் முழுவதும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. வேற்றுகிரக வாசிகள், எலியன்கள், பறக்கும் தட்டுக்கள் என பல்வேறு விஷயங்கள் இன்றும் புரியாத புதிராக தான் உள்ளது. இந்நிலையில் தான் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பால்ஜி, காம்போல்ஜ், ராம்புரா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் 15 கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மாலையில் 3 கிராமங்களிலும் வானில் இருந்து பறந்து வந்த மர்மபொருள் ஒன்று அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் விழுந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பொருள் வட்டவடிவில் இரும்பு பந்து போன்று இருந்தது. அதனை தொட பொதுமக்கள் அச்சமடைந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பால்ஜ் கிராமத்தில் விழுந்த பந்து வடிவிலான பொருள் 5 கிலோ எடையுடன் இருந்தன. மற்ற கிராமங்களில் விழுந்த பொருட்களும் தலா 5 கிலோ எடையுடன் தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛வானில் இருந்த வந்த பந்து வடிவிலான பொருட்கள் செயற்கோள்களில் இருந்து பிரிந்த பாகங்களாக இருக்கலாம்” என தெரிவித்தனர்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அஜித் ராஜியன் கூறுகையில், ‛‛பால்ஜ் கிராமத்தில் மாலை 4.45 மணிக்கு முதன் முதலாக மர்மபொருள் விழுந்தது. அதன்பிறகு மற்ற 2 கிராமங்களில் விழுந்துள்ளது. காம்போல்ஜ் கிராமத்தில் மட்டும் வீட்டில் விழுந்தது. பிற 2 கிராமங்களில் வெட்டவெளியில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காயம், உயிர் சேதம் ஏற்படவில்லை. இது எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் விண்வெளிக்கு அனுப்பிய சாதனங்களில் இருந்து பிரிந்த பொருட்களாக இருக்கலாம்” என்றார்.