ராமேசுவரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருப்படுவது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு காசி செல்லும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்து புனித நீராடி செல்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. வடமாநில, தென்மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி சென்றது. இதேபோல் முகுந்தராய சத்திரம் மற்றும் அரிச்சல்முனை ஆகிய பகுதிகளிலும் கடல் உள்வாங்கி சென்றது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக கடலில் போட்ட சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் தெரிந்தன. அதனை சில பக்தர்கள் ஆர்வமுடன் சென்று பார்த்தனர். பல பக்தர்கள் சுனாமி அச்சத்தில் பின்வாங்கி சென்றனர். அதன் பின்னர் 6 மணி அளவில் உள்வாங்கி சென்ற கடல் மீண்டும் பழைய நிலையை அடைந்தது. இதனால் பக்தர்கள் அச்சம் நீங்கி ஆனந்தமாக கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
இதுபற்றி சில பக்தர்கள் கூறும்போது, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கடலில் இயற்கையாக சில மாற்றங்கள் நிகழும். அப்போது கடல் உள்வாங்கி செல்லும் மேலும் கடலில் உள்ள கழிவுகள் தானாக வெளியில் வந்து விடும். இதற்காக பயப்பட தேவையில்லை. இது வழக்கமான ஒரு நிகழ்வுதான் என தெரிவித்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் ஒருபுறம் கடல் சீற்றமும் மறுபுறம் நீர்மட்டம் தாழ்வும் இருப்பதால் கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில்133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 3 படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.
இன்று வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் படகுமூலம் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதற்கிடையில் இன்று அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஒருபுறம் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானது. மறுபுறம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுஉள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அதன் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைத்தது. இதைத்தொடர்ந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்ப்பதற்காக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு விட்டு சென்றனர். பலர் கடற்கரையில் இருந்தபடியே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை செல்போன் மூலம் செல்பி எடுத்து சென்றனர்.
கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, கீழமணக்குடி மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் கிளம்பி ஆக்ரோஷமாக வீசின. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு இந்த ராட்சத அலைகள் ஆக்ரோசமாக எழும்பி கரையை நோக்கி வந்து தொட்டுவிட்டுச்சென்றன.
ஒரு சில பகுதிகளில் கடல் நீர் மட்டம் தாழ்வாகி சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்த கடல் சீற்றத்தினால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.