மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டம் அரோன் வனப் பகுதியில் 3 போலீசாரை சுட்டுக் கொன்ற 2 வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டம் அரோன் வனப் பகுதியில் மான், மயில்களை ஒரு கும்பல் வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு 2 தினங்களுக்கு முன் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். இதை பார்த்த வேட்டை கும்பல், தங்களிடம் இருந்த துப்பாக்கியால் அவர்களை சுட்டது. இதில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், போலீஸ்காரர்கள் நீரஜ் பார்கவா, சாந்த்ராம் மீனா ஆகியோர் பலியாகினர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேட்டை கும்பலை வேட்டையாட பெரிய போலீஸ் படையே களமிறங்கியது. இந்த பிரச்னையை தீவிரமாக கருதிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், போலீசார் கொல்லப்பட்டு பல மணி நேரமாகியும் சம்பவ இடத்துக்கு செல்லாமல் இருந்த குவாலியர் காவல்துறை ஐஜி அனில் சர்மாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும், பலியான 3 போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரண நிதியும் அறிவித்தார். இந்நிலையில், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், குணா மாவட்டம், பெடோரியா கிராமத்தைச் சேர்ந்த நவ்ஷாத் மேவதி என்பவன்தான் வேட்டை கும்பலின் தலைவன் என தெரிந்தது. அவனை தேடியபோது, போலீசார் கொல்லப்பட்ட அதே வனப்பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். அவனை அதே இடத்தில் சுட்டுக் கொன்றனர். மற்றொரு குற்றவாளியான ஷாஜத் கானை, நேற்று முன்தினம் மாலை சுட்டுக் கொன்றனர். மேலும், வேட்டை கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு, போலீசாரை கொன்ற மேவதி, ஷாஜத்கானின் வீடுகளை புல்டோசர் மூலம் போலீசார் இடித்து தள்ளினர்.