ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு என்று மதுரை, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரது உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். எனவே ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமஜெயத்தை ரவுடிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து திருச்சி போலீசார் தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இருந்தபோதிலும் ராமஜெயத்தை கொன்ற குற்றவாளிகள் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்தநிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். எனவே அந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு நிலைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதிலும் குற்றவாளிகள் தொடர்பாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை. திருச்சி ராமஜெயம் கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கில் ஈடுபட்ட கும்பலில் ஒரு சிலர் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. எனவே இங்கு வசிக்கும் ஒரு சிலருக்கு குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கை, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் “திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக துப்பு கொடுத்தால், ரூ 50 லட்சம் வெகுமதி தரப்படும்” என்ற வாசகம் இடம்பெற்று உள்ளது.