11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2021-22-ம் கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழிற்பயிற்சி படிக்கும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இந்த மாணவ-மாணவிகளுக்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஒப்பந்த புள்ளி கோரும் கூட்டத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்து 3 மாத காலத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.