25 முதல் 31-ந்தேதி வரை விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் ஆகிவற்றை கண்டித்து வருகிற 25 முதல் 31-ந்தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த இடதுசாரிகள் அழைப்பு விடுத்து உள்ளன. இது தொடர்பாக இடதுசாரிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மக்கள் மீது வரலாறு காணாத சுமையை ஏற்றி வருகிறது. கோடிக்கணக்கானோர் கடும் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் வேலையின்மை மக்களின் துயரங்களை அதிகப்படுத்துகிறது’ என்று குறிப்படப்பட்டு உள்ளது.
கடந்த ஓராண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 70 சதவீதமும், காய்கறிகளின் விலை 20 சதவீதமும், சமையல் எண்ணெய் விலை 23 சதவீதமும், தானியங்களின் விலை 8 சதவீதமும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள இடதுசாரிகள், பெட்ரோலியப் பொருட்கள். கியாஸ் சிலிண்டர்களின் தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் கோதுமையின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை பணவீக்கத்தை அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. இந்த கூட்டறிக்கையில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.