ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரும், பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்திராணி முகர்ஜிக்கு கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.