சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை போலீசார் நெல்லை விரைந்தனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டு அறைக்கு மா்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வெடிக்கும் என்றும், உங்களால் முடிந்தால் விமான நிலையத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து சென்னை விமான நிலைய போலீஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உஷாரான மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்தனர். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் அனைத்து பயணிகளின் உடைமைகள், விமானங்களில் ஏற்ற வந்திருந்த சரக்கு பார்சல்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், விமான நிலையத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக கண்காணித்தனர்.

தீவிர சோதனையில் இது வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசி அழைப்பு எந்த இடத்தில் இருந்து வந்துள்ளது என்பதை ஆய்வு செய்தனர். அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது என தெரியவந்தது. யாரோ ஒரு விஷமி தான் இதைப்போன்று அழைப்பு விடுக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் அடங்கிய தனிப்படை மர்ம நபரை பிடிக்க நெல்லை விரைந்துள்ளனர்.