தி.மு.க. வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சசிகலா குற்றம் சாட்டினார்.
சிவகங்கை பழைய அரண்மனையில் மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். தி.மு.க. ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தேர்தலின்போது அவர்கள் கூறியது எதையும் ஆட்சிக்கு வந்த பின்னர் செய்யவில்லை. இதனால் தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் மக்களுக்கு என்ன தேவை என்று மத்திய அரசிடம் கேட்டு வாங்குவதை விட்டுவிட்டு அவர்களை குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசை குறை கூறுவது மட்டும் நமது வேலை அல்ல.
மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த பின்னரும் இதையே இன்னும் எத்தனை ஆண்டிற்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கூட மத்தியில் வேறு அரசு இருந்தது. அப்போதெல்லாம் இதுபோல் கூறவில்லை. மக்களுக்கு என்ன திட்டங்கள் தேவையோ அதை கேட்டு வாங்கி கொடுக்கப்பட்டது. தி.மு.க. அரசு அடுத்த தேர்தல் வரை மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.