குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி இன்று 5வது நாளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீட்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், குவாரியில் சிக்கியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் சொல்வதன் அடிப்படையில் பார்க்கும்போது சுமார் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே அந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். குவாரியில் இருந்து வெளியே கல் கொண்டு செல்லும் போக்குவரத்துக்கான உரிமம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ரத்து செய்யப்பட்டிருந்தது. விபத்து நடந்து அடுத்த நாளான 15ம் தேதியே குவாரிக்கான குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாலுகா வாரியாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை முறைகேடாக செயல்பட்ட குவாரிகளுக்கு சுமார் 20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமார் 55 குவாரிகளை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறியதாவது:-
இந்த குவாரி விபத்து தொடர்பாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களை தேடி வருகிறோம். தொடர்ந்து குவாரி உரிமையாளர் செல்வராஜ் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சொந்தமான திசையன்விளையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகின்றது. இதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.