மே-18: தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுநாளையொட்டி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

இலங்கையில் நடந்த ஈழப்போரின்போது கடந்த 2009-ம் ஆண்டு மே 17, 18, 19 ஆகிய 3 நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களின் நினைவாக தஞ்சை விளார் சாலையில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளது. இந்த முற்றத்தில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தமிழின படுகொலை நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஈழப்போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறும்போது, ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை கடந்து இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சினையாக உருவாகி உள்ளது. ஏனென்றால் இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி இருக்கிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் அமைத்த குவாட் கூட்டணியில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்திய பிரதமர் மோடி இந்த குவாட் மூலம் இலங்கை இன பிரச்சினையில் தலையிட்டு இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்திருக்கக்கூடிய அபாயத்தை தடுப்பதுடன், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, இந்தி திணிப்பு போன்ற பிரச்சினை என எந்த பிரச்சினையாக இருந்தாலும், நமது மொழிக்கோ, இனத்துக்கோ ஊறு விளைவிக்கக்கூடிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் உலகத்தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் முத்துமணி, இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட பலர் கலந்து

மேலும் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதான பேரறிவாளன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இப்போது அவருக்கு 48 வயது ஆகிறது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் மூலம் விடுதலை செய்யப்பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.இந்த தீர்ப்பின் மூலம் இதே வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கக்கூடிய மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்று நான் நம்புகிறேன். மேலும் தமிழக சிறையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களையும், இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனின் வாழ்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும். இது அரசின் மனிதாபிமான கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.