சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி பேசினார்.

சிதம்பரம், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார். அதன்படி சிதம்பரத்தில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று பேசியதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு மட்டும் தாய் இருக்கிறார் என எண்ணுவது தவறான கருத்து. அன்றைய தினம் ராஜீவ் காந்தி கொல்லப்படும் போது போலீஸ் அதிகாரிகளும், மற்றவர்களும் கொல்லப்பட்டார்களே. அவர்களுக்கும் தாய், தந்தை, மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இல்லையா. அவர்களின் மன நிலையை இவர்கள் யோசித்து பார்த்தார்களா.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக்கூறி கோவையில் இஸ்லாமியர்கள் சிறையில் உள்ளனர். அவர்களை மட்டும் ஏன் விடுதலை செய்யவில்லை. இஸ்லாமியர்கள் என்பதற்காகவா. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளீர்களே தவிற, குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யவில்லை. எனவே கோவை சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை கோர்ட்டு விடுதலை செய்ததை கண்டித்து, ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் நா.கார்த்தி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் லெனின் பிரசாத் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் வெள்ளை துணி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மாநில தலைவர் லெனின் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரை விடுதலை செய்தால், மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற பிரச்சினை எழும். அவரை தியாகி போல நினைத்து சிலர் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. ராஜீவ் காந்தி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களும் தமிழர்கள் என்பதை, தற்போது கொண்டாடுவோர் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.