நாட்டின் பாதுகாப்பு கருதி சீன நிறுவனத்துடன் தொடர்புடைய கம்பெனியின் டெண்டரை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கர்நாடக சுகாதார துறை சார்பில், ‘போரஸ் ஹெல்த்கேர்’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்யக் கோரி, ‘பீப்பிள்ஸ் இண்டியா லிமிடெட்’ நிறுவனம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஷாங்காய் யுனைடெட் இமேஜிங் ஹெல்த்கேர் சென்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது. இந்த நிறுவன ஏஜன்டாக, போரஸ் ஹெல்த் கேர் செயல்படுகிறது. எனவே, அதன் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
முதலில் நிராகரித்த நீதிமன்றம், பின் ஏற்று கொண்டது. இதன் விசாரணை, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ராச்சய்யா முன்னிலையில் நேற்று நடந்தது.நீதிபதிகள் கூறுகையில், ‘மேலோட்டமாக பார்க்கும் போது இந்த டெண்டர் ஒதுக்கி இருப்பதில், நிதித் துறையின் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. விதிமுறைப்படி, இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள எந்த ஒரு நாடும் டெண்டரில் பங்கேற்க முடியாது. இந்த நிறுவனத்தின் ஐந்தாவது பிரதிவாதி, சீனாவுடன் தொடர்பு வைத்துள்ளார். எனவே நாட்டின் நலன், பாதுகாப்பு கருதி, இந்த டெண்டருக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை வரும் வரை டெண்டர் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.