முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன பேரறிவாளன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகக் கூறி பேரறிவாளன் கைது செய்யப்பட்டிருந்தார். இதில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை 142-வது பிரிவைச் செயல்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பேரறிவாளன் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். அப்போது மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர். வைகோ அங்கு வருவதற்கு முன்பு பேரறிவாளன் துரை வைகோவிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வைகோ பொடோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, வேலூர் சிறையில் ஒன்றாக இருந்தது குறித்தும் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். வைகோ அங்கு வந்த பின்னர், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடிய விதம் குறித்தும் நினைவுகூர்ந்தார். இந்த சந்திப்பின் போது வைகோ மிகவும் நெகிழ்ச்சி உடன் காணப்பட்டார்.
அதன் பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, “இன்று இவரை விடுதலையான பேரறிவாளனாக நான் பார்க்கிறேன். இச்சம்பவத்திற்கு முன்பும் பேரறிவாளன் எனது வீட்டிற்கு வருவார். நல்ல ஈழ உணர்வாளர். ஆனால், இதில் நிரபராதி தான். எந்த குற்றமும் செய்யாதவர். அதில் எந்த தொடர்பும் இல்லாதவர். கடைசியில் நீதி வென்றது. ஆளுநர் அரசின் முடிவைச் செயல்படுத்தாமல் இருந்தார். கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. இருப்பினும், அவரது இளமைக் காலம் அழிந்துவிட்டது. வசந்த காலம் போய்விட்டது. ஆனால், இதற்காக அவரது தாயார் அற்புதம்மாள் போராடிய போராட்டம் மிகப் பெரியது. யாராக இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள். சோர்ந்துவிடுவார்கள். கவலையில் வீழ்ந்துவிடுவார்கள். ஆனால், இது எதுவும் இல்லாமல், எமன் வாயில் இருந்து மீட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மீதியுள்ள 6 பேரும் விடுதலை ஆகவிடுவார்கள்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேரறிவாளன் பேசுகையில், “நான் சிறைக்குப் போவதற்கு முன்னரே, இந்த வீட்டிற்கு வந்து வைகோ அண்ணனைச் சந்தித்துள்ளேன். இதே வீட்டில் உணவு அருந்தி உள்ளேன். பொடா காலத்தில் அண்ணனுடன் சிறையில் இருந்தது மறக்க முடியாது தருணம். அப்போது அதிகாரத்தில் இருந்த அத்வானி மற்றும் வாஜ்பாய் ஆகியோரிடம் எங்களுக்காகப் பேசி, மனுவும் கொடுத்துள்ளார். நாட்டில் தூக்குத் தண்டனை என்று ஒன்றே இருக்கக்கூடாது. அதை ஒழிக்க வேண்டும் என்று கடைசி வரை போராடியவர் ராம்ஜெத்மலானி. அவர் வழக்கிற்குள் வந்த பிறகு தான், வழக்கு பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. பல மூத்த வழக்கறிஞர்கள் எங்கள் வழக்கை பார்க்க ராம்ஜெத்மலானி முக்கிய காரணம். அப்படிப்பட்ட ராம்ஜெத்மலானி எங்கள் வழக்கில் வர முழு காரணம் அண்ணன் வைகோ தான். அண்ணன் இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது. இதற்கெல்லாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.