ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் போராட்டம்!

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு, 1991 மே, 21ல் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,காங்கிரஸ் கட்சியினர், ‘வன்முறையை எதிர்ப்போம்; கருத்து வேறுபாடுகளுக்கு, கொலை செய்வது தீர்வாகாது’ என, எழுதிய பதாகையை கையில் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் இறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில், நேற்று ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை தலைமையில், 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.