நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம் என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக இருக்கும் நாகேஸ்வர ராவ், வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்துக்கு 24ம் தேதி முதல், ஜூலை 11ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு, நேற்று தான் கடைசி பணி நாளாக அமைந்தது. இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நேற்று பிரிவுபசார விழா நடந்தது. இதில் நீதிபதி நாகேஸ்வர ராவ் பேசியதாவது:-
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியது, மிகவும் சிறப்பாக இருந்தது. அதேநேரத்தில் வழக்கறிஞர் பணி மீதான எனது பற்று, இப்போதும் நீடிக்கிறது. நீதிபதி பணிக்காலத்தில், சக நீதிபதிகளிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீதிபதிகள் துறவிகள் அல்ல; சில நேரங்களில் பணிச்சுமையால் நீதிபதிகளும் நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது போன்ற சூழ்நிலைகளை சந்தித்து உள்ளேன். அந்த சமயத்தில், நான் கோபப்பட்டு பேசியிருக்கலாம். என் வார்த்தைகள் சிலரை புண்படுத்திஇருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றி தான் நீதி வழங்குகிறோம். ஆனால், அது ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், மறுதரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.