லட்சத்தீவு அருகே குமரியை சேர்ந்த 2 படகுகளில் கடத்தப்பட்ட ரூ.1526 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக குமரியை சேர்ந்தவர்கள் உள்பட 20 பேரை கைதாகினர்.
லட்சத்தீவு அருகே இரண்டு படகுகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சியிலிருந்து வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கடலோர காவல் படையினர் அங்கு விரைந்தனர். தீவிர பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த குமரியை சேர்ந்த இரண்டு படகுகளில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் 220 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1526 கோடியாகும். இவை அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பின்னர் படகுகளில் தமிழ்நாட்டுக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள் அந்த படகுகளில் இருந்த 20 பேரை கைது செய்தனர். இவர்களில் 16 பேர் குமரி மாவட்டம் தூத்தூர் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பின்னர் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் அனைவரும் இன்று கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.