வானிலை மோசம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் ஆக்ரா சென்றது

டெல்லியில் கனமழையால் வானிலை மோசமடைந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் ஆக்ராவுக்கு திருப்பி விடப்பட்டது.

மராட்டியத்தின் புனே நகரில் நடந்த கூட்டமொன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பா.ஜ.க. தொண்டர்களிடையே நேற்று பேசினார். இதன்பின்னர் குஜராத் சென்ற அவர், வதோதரா நகரில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின்னர் பொது கூட்டம் ஒன்றிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல தயாரானார். ஆனால், டெல்லியில் கடும் வெப்பநிலை நிலவி வந்த சூழலில், சில பகுதிகளில் நேற்று மழை பெய்து குளிர்வித்தது.

இதனால், டெல்லியில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. எனினும், டெல்லியில் வானிலை மோசமடைந்து இருந்தது. இதனால், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் உள்ளிட்ட 11 விமானங்கள் டெல்லிக்கு செல்வதற்கு பதிலாக வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. எனினும், டெல்லியில் வானிலை மோசமடைந்திருந்த சூழலில், ராஜ்நாத் சிங் பயணம் செய்த விமானம் ஆக்ராவுக்கு திருப்பி விடப்பட்டது. மற்ற 11 விமானங்களும், ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.