சென்னையில் தமிழீழ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இத்தடையை மீறி கூட்டம் நடத்தியதாக அதன் ஆதரவாளர்கள் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தியாகராயர் நகரில் பென்ஸ்பார்க் நட்சத்திர விடுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்தப்படுவதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்திருந்தனர். இதனையடுத்து இக்கூட்டத்தை நடத்தக் கூடாது என போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சென்னை மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலை கழக தலைமை அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. உள்ளிட்ட பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினர். இதில் பேசிய வைகோ, 2009-ம் ஆண்டு மே 16-ந் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்று சொன்னார்கள். வழிமுறைகளை மாற்றுகிறோம் என்று தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்னார். அப்படியான மாற்று முறை தான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என குறிப்பிட்டார்.
அதேநேரத்தில் திராவிடர் விடுதலை கழகத்தில் உள் அரங்க கூட்டமாகவும் நடத்தவும் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். உள் அரங்க கூட்டத்துக்கு போலீசார் எப்படி அனுமதி மறுக்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீசாருடன் வாதிட்டனர். ஆனால் போலீசார் இதனை ஏற்கவில்லை. இதையடுத்து அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் சரசுவதி, தமிழ்த் தேசவிடுதலைக் கழகம் தலைவர் தியாகு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் வழக்கறிஞர் பாவேந்தன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தமிழினியன், திராவிடர் விடுதலைக் கழகம் சுகுமாரன், சுதா காந்தி, மகிழன் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். சில மணிநேரம் கழித்து அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.