கலால் வரியை குறைத்து பித்தலாட்டம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில், கலால் வரியை குறைத்து ஒரு பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

திருப்போரூர் தொகுதி திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்போரூரில் நடந்தது. திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

10 ஆண்டு காலம் நடந்த வேதனையான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஓராண்டு ஆட்சியை நடத்தியதே பெரும் சாதனைதான். 10 ஆண்டுகளாக கஜானாவை சுரண்டி கொழுத்த ஆட்சி நமக்கு கடினமான சூழலைத்தான் கொடுத்து சென்றது. மாநிலங்களை கண்டு கொள்ளாத ஒன்றிய பாஜ அரசு, அவர்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குத்தான் அள்ளி அள்ளி கொடுக்கிறது. ஆனால், நம்மைப் போன்ற மாநிலங்களுக்கு அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. ₹26 ஆயிரம் கோடி ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டி உள்ளது. தேர்தல் நேரத்தில் சொன்ன 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

இப்போது கலால் வரியை குறைத்து ஒரு பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது. அவர்கள் ஏற்றியதைத்தான் குறைத்திருக்கிறார்கள். இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது போகப் போகத்தான் தெரியும். பாஜ தலைவராக உள்ள அண்ணாமலை போலீசாக இருந்தவர். அப்போது குற்றவாளிகளை பிடிக்காமல் தற்போது தமிழ்நாட்டில் கட்சி தலைவராக ஆன பிறகு எல்லா குற்றவாளிகளையும் பிடித்து, தனது கட்சியில் சேர்க்கிறார். அவர்கள் முதலில் வார்டு கவுன்சிலர் பதவியில் தனியாக நின்று வரட்டும். அதற்குப் பிறகு கோட்டைக்கு வருவது பற்றி பேசலாம். இவ்வாறு அவர் பேசினார்.