கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கோடை விழாவை அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலைப்பகுதியில் பழுதடையும் வாகனங்களை அகற்றுவதற்காக மீட்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழுதாகும் வாகனங்களை சீரமைப்பதற்காக தனி குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணிபுரிய தனியார் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து குவிந்தனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை விழாவை முன்னிட்டு சர்வதேச புகழ்பெற்ற 124-வது மலர் கண்காட்சி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மலர் மாடத்தில் 35 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கோடை விழாவையொட்டி பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. அந்த செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், கோடை விழாவை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மலர் அலங்காரங்கள் முன்பு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
கண்காட்சியை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கண்காட்சி தொடங்கிய முதல் நாளில் 12,000 பேர், 21-ந் தேதி 19,000 பேர், 22-ந் தேதி 25,000 பேர், 23-ந் தேதி 22,000 பேர் என 4 நாட்களில் 78,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர். மலர் கண்காட்சி நிறைவு விழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்குகிறார். கண்காட்சியில் சிறந்த மலர் அரங்கம், தனியார் பூங்கா, வீடு மற்றும் மாடி மலர் தோட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படுகிறது. சிறந்த பூங்காவுக்கான கவர்னர் கோப்பை, சிறந்த மலருக்கான முதல்-அமைச்சர் கோப்பையும் வழங்கப்படுகிறது.