விருதுநகரில் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் 7 பேர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை, ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் மற்றும் 4 சிறார்கள் என 8 பேர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விருதுநகர் ரூரல் போலீசில் கடந்த மார்ச் 21ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேரும் கைது செய்யப்பட்டனர். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி நியமனம் செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்தது. சிபிசிஐடி போலீசார் 16 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை மார்ச் 29ல் 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். தொடர்ந்து ஏப். 2ல் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த 4 சிறார்களிடமும் விசாரணை நடத்தினர். ஏப். 7ல் 4 சிறார்களுக்கும் விருதுநகர் சிறார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டாததை தொடர்ந்து ஒரு சிறுவனை சிபிசிஐடி போலீசார் வழக்கில் இருந்து விடுவித்தனர். இதை தொடர்ந்து மதுரை சிறையிலிருந்த 4 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
விசாரணை முடிந்த நிலையில், நேற்று திருவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையில் சிபிசிஐடி போலீசார் 7 பேர் மீதும் 806 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். மேலும், விருதுநகர் சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா முன்னிலையிலும் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் தொடர்புடைய 84 ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.