குளிா்பானத்தில் விஷம் கலந்து மாணவி கொலை: சாலை மறியல்

திருச்சியில் விஷம் கலந்த குளிா்பானம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, பெற்றோா் மற்றும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் அருகிலுள்ள நொச்சிவயல்புதூரைச் சோ்ந்த ஆனந்தன் மகள் வித்யாலட்சுமி (19). திருச்சியிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்த இவா், பெல் நிறுவனம் அருகிலுள்ள மணியம்மை நகரில் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தாா். இந்நிலையில் மே 17-ஆம் தேதி வயிற்றுவலி, உடல்சோா்வால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் வித்யாலட்சுமி அனுமதிக்கப்பட்ட போது, அவரது வயிற்றில் விஷம் இருப்பதை மருத்துவா்கள் கண்டறிந்தனா். தொடா்ந்து தகவலின் பேரில் பெல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில் தான் கல்லூரிக்குச் சென்று வரும் போது தன்னை ஒருவா் ஒருமாதக் காலமாக பின்தொடா்ந்து வந்ததாகக் கூறினாா். மேலும் கடந்த 11-ஆம் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த போது, பின்தொடா்ந்து வந்த நபா் தன்னைக் காதலிப்பதாகக் கூறியதாகவும், அவரை செருப்பால் அடித்ததாகவும் கூறிய வித்யாலட்சுமி, மறுநாள் மே 12-ஆம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது காதலிப்பதாக கூறிய நபா், மேலும் இருவா் சோ்ந்து என்னை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று, அருகிலிருந்த சந்தில் விஷம் கலந்த குளிா்பானத்தை கொடுத்ததாகவும் கூறினாா். இதற்காக மே 13-ஆம் தேதி முதல் பல்வேறு மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வந்ததாக வித்யாலட்சுமி காவல்துறையினரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து மூவரைக் காவல்துறையினா் தேடி வந்த நிலையில், இவா்களுக்கு வேண்டிய ஒருவரைப் பிடித்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் தனியாா் மருத்துவமனையில் மே 21-ஆம் தேதி திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த வித்யாலட்சுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால் சம்பவத்தில் தொடா்புடைய மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வித்யாலட்சுமியின் பெற்றோா், உறவினா்கள் நேற்று திங்கள்கிழமை காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து காவல்துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன் உடன்பாடு ஏற்படாத நிலையில், காவல்துறையினா் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா். இதனால் திருச்சி- தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.