வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை பூக்கடை, பெரியமேடு அருகே இலங்கை தமிழர்கள் வெடிகுண்டுகள் செய்ய தேவையான பொருட்களை வெளி மாநிலத்தில் இருந்து வரவழைத்து அங்கிருந்து இலங்கைக்கு எடுத்து செல்ல வைத்திருந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் இலங்கை தமிழர்கள் சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து, கருணாகரன் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் சிவகரன், முத்து ஆகிய 2 பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், வேலுசாமி, கிரிதரன், கருணாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் 3 பேர் தலைமறைவாகவும், 4 பேர் மீது பிடிவாரண்டும், ஒருவர் இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.