குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.

குஜராத்தின் கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த வெளிநாட்டு கப்பலில் இருந்த சரக்கு பெட்டகங்கள், அருகில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சரக்கு பெட்டகங்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கு பெட்டகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், இறக்குமதி பொருட்களுக்கு நடுவே, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 56 கிலோ கோகெய்ன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த மாதம் குஜராத்தின் கன்ட்லா துறைமுகம் அருகே சரக்கு பெட்டகத்தில் மறைத்து வைத்திருந்த, 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான, 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு முந்த்ரா துறைமுகத்தில் இரு சரக்கு பெட்டகங்களில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 3,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவே, இந்தியாவில் மிக அதிக மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதலாக கருதப்படுகிறது.