சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நேற்று நடந்த பல்வேறு புதிய திட்டப்பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனால் பிரதமர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் இருந்து ஒருவரின் பெயரில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று சமீபத்தில் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சேலத்தில் எங்கிருந்து மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது? அதை அனுப்பியவர் யார்? அவரது முகவரி குறித்து விசாரணை நடத்தினர். அந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ஒருவரின் முகவரியும் இடம்பெற்று இருந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று அந்த முகவரியில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் மிரட்டல் கடிதம் தான் அனுப்பவில்லை என்றும், தனது பெயரில் யாராவது அனுப்பி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எனது பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கன்னங்குறிச்சியை சேர்ந்த உறவினர் ஒருவர் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் எனது உறவினர் மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கன்னங்குறிச்சிக்கு சென்ற போலீசார், அந்த நபரின் உறவினரான ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பேராசிரியர் தான் மிரட்டல் கடிதம் அனுப்பி வைத்தாரா? அல்லது வேறு யாராவது அனுப்பினார்களா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.