மத்திய நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்று பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்கள், நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் வேண்டுகோளும் விடுத்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கக்கூடிய முதல் அரசு விழா இது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்ததற்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், தமிழக முதல்-அமைச்சர் என்ற அடிப்படையிலும் பிரதமருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு பல்வேறு வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகையில் சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிகளிலேயே தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்துள்ளாது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளார்ச்சி தனித்துவம் மிக்கது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரத்தை சார்ந்தது மட்டுமல்ல. சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.

நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும், தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பை தருகிறது என்பது பிரதமருக்கு தெரியும் என்று உளமாற நம்புகிறேன். சிலவற்றை எடுத்துரைக்க வேண்டுமென்றால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம். பங்களிப்பை உயர்த்த வேண்டுகோள் ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவீதம். ஜவுளித்துறை ஏற்று மதியில் 19.4 சதவீதம். கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம். தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம். ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே. எனவே தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் அளிக்கக்கூடிய பங்குக்கு ஏற்ப ஒன்றிய அரசு திட்டங்களிலும், நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் உண்மையான கூட்டுறவு, கூட்டாட்சியாக அமையும்.

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழ்நாட்டில் தற்போது 44 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செய்லபடுத்திக்கொண்டு இருக்கும் நிலையிலே, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மட்டும் இந்த ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்து இருக்கும் தொகை, 18 ஆயிரத்து 218 கோடியே 91 லட்சம் ரூபாய். எனவே சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் உங்களோடு சேர்ந்து பணியாற்ற நாங்கள் முனைப்பாக இருக்கிறோம். மேலும் அதிகளவிலான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படக்கூடிய ஒன்றிய அரசின் பங்கானது, திட்டம் முடியும் வரை தொடர வேண்டும் என்றும், பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் அவர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த முடியாதபோது ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இந்திய ஒன்றியத்தில் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கும், முன்னோக்கி நகர்த்துவதற்கும் தமிழக அரசு தொடர்ந்து சேவை செய்யும். எனவே தமிழகத்துக்கு உங்கள் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டுகிறேன். கூட்டாட்சியின் உண்மையான உணர்வில் நமது மாநிலத்துக்கு அதிக திட்டங்களையும், அதிக நிதியையும் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நவீன தமிழ்நாட்டின் தந்தையான, முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது போல, ‘உறவுக்கு கைக்கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்!’. ஒன்றிய அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்த முன்வந்த திட்டங்களுக்கும், வருங்காலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களுக்கும் நம்முடைய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.