காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது: மெஹபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்று, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஹஷூரா சடூரா பகுதியைச் சோ்ந்த தொலைக்காட்சிக் கலைஞா் அமரீன் பட். இவா் தனது உறவினா் ஃபா்ஹான் ஜுபைருடன்(10) புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் 3 போ் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினா். அதில், அம்ரீன் பட் உயிரிழந்தாா். ஃபா்ஹான் ஜுபைா் காயமைடந்தாா். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு பிடிபி தலைவா் மெஹபூபா முப்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. எண்ணற்ற அப்பாவி பொதுமக்கள் காரணமின்றி கொல்லப்படுகிறாா்கள். அவா்களின் குடும்பங்கள் நிலைகுலைந்து நிற்கின்றன. காஷ்மீரில் படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு என்ன கொள்கையை வகுக்கப் போகிறது? இங்கு கொடூரமாகப் படுகொலைகள் நிகழ்த்தப்படும் வேளையில், அதற்கு மாறாக, இயல்பு நிலையை ஏற்படுத்திவிட்டதாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அம்ரீன் பட் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவன் ஃபா்ஹான் ஜுபைா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.