தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை தமிழக ஆம்ஆத்மி முற்றுகையிடும் என்று வசீகரன் கூறியுள்ளார்.
ஆம்ஆத்மி கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2019ல் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வந்திருக்கும் திரு.நரேந்திர மோடி, 2014 பாராளுமன்ற தேர்தலின்போது ஏராளமான பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதில் மிக முக்கியமானது தான் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறினார், அப்படி எதுவும் இதுவரை செய்யவில்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒரு பணியும் இதற்கான முன் முயற்சியும் எதுவும் எடுக்கப்படவில்லை, சொன்னது போல் இளைஞர்களுக்கு வேலையும் கொடுக்கப்படவில்லை சொன்ன வாக்கை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகமொத்தம் இன்று வரை 8 ஆண்டுகளுக்கு மோடி 16 கோடி இளைஞர்களுக்கு வேலை உருவாக்கி கொடுத்து இருக்க வேண்டும்.ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.
அடிக்கல் நாட்டுவதில் வல்லவரான திரு.மோடி இந்தியாவில் பல லட்சம் கோடிகளுக்கு அடிக்கல் நாட்டுவதையே பிழைப்பாக கொண்டுள்ளார். கார்பொரேட்களின் வளர்ச்சிக்காகவே பிரமாண்ட திட்டங்கள் அறிமுகம், அடிக்கல் நாட்டுவதின் நோக்கமும் இருக்கும். அவர் மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை இது போல் ஏராளமாக சொல்லலாம்.
நாட்டில் விலைவாசி குறைந்த பாடில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்காண எந்த செய்தியும் மோடியிடம் இல்லை, சமையல் எரிவாயு சிலிண்டர் என்பது மக்களின் அடிப்படை ஆதாரமாக விளங்கி கொண்டிருக்கிறது சிலிண்டர் விலை குறைப்பு குறித்து எதுவும் சொல்வது இல்லை. மோடி தான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பாதியாக குறைபேன் என்றும் 2014 தேர்தல் வாக்குறுதியில் மோடி சொல்லியிருக்கிறார் என்பதை யாரும் மறக்கவில்லை அது புதிதாக அரசியலுக்கு வந்துள்ள திரு.அண்ணாமலை.க்கு தெரிய வாய்ப்பில்லை.
தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் திரு மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாம் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு 4 ரூபாயும், சமையல் எரிவாயுக்கு 100 ரூபாயும் குறைப்பதாக கூறினார்கள். ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்து இருக்கிறார்கள் திமுக தாம் கூறிய பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றமல் தாமதித்து வருவது முறையல்ல, விரைவில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வேண்டும் என்று கேட்கிற தகுதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு இல்லை! பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் அதிகமாகவே உள்ளது அதை குறைக்க அங்கு போய் திரு.அண்ணாமலை போராடலாம் கெடு விதிக்கலாம். நான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை பாதியாக குறைப்பேன் என்று சொன்ன பிரதமர் மோடியை எதிர்த்து திருஅண்ணாமலை போராடலாம் மோடிக்கு கெடு விதிக்கலாம்.
மார்ச் மாதம் 22, 2022 சென்னையில் பெட்ரோலின் விலை ரூபாய் 102 ரூபாய், மே மாதம் 22, 2022ம் சென்னையில் பெட்ரோலின் விலை ரூபாய் 102 ஆகும் விலையை ஏற்றி குறைத்தாலும் பெட்ரோலின் விலை 102 ஆக உள்ளது, 10 ரூபாய் உயர்த்தி 9 ரூபாய் குறைக்கும் இப்படி ஒரு பித்தலாட்ட விலை குறைப்பை மத்திய பிஜேபி அரசு செய்திருக்கிறது செய்து கொண்டிருக்கிறது. வெட்கமே இல்லாமல் திரு.அண்ணாமலையும் மோடி பெட்ரோலுக்கு விலையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்.
நான் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்பேன் இந்திய குடிமக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவேன் என்று சொன்னவர் தான் இந்த புனிதர் திரு நரேந்திர மோடி. அதுமட்டுமில்லாமல் நவம்பர் 8, 2016, 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து பணமதிப்பிழப்பு மோடி கொண்டு வந்தபோது, இன்றிலிருந்து 50 நாட்களுக்குள் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணம் அனைத்தையும் நான் இந்தியாவிற்கு கொண்டு வருவேன் அப்படி நான் கொண்டுவர தவறினால் என்னை தூக்கிலிடுங்கள் என்று சொன்னவர் தான் இந்த புனிதர் திரு.நரேந்திர மோடி. ஆனால் இன்னும் வெட்கமே இல்லாமல் தான் இருக்கிறார் இந்த மோடி, இன்றும் புதுப்புது வடைகளை வாயால் சுட்டு கொண்டு தான் இருக்கிறார். ஆனால் கருப்பு பணம் மட்டும் இன்று வரை வந்தபாடில்லை.
பொய் புரட்டையே மூலதனமாக வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவிற்கு பத்து நாள் கெடு தருகிறேன் அதற்குள் வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு அதாவது 8 வருடத்தில் 16 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக பொய் சொல்லி இளைஞர்களை ஏமாற்றிய மோடி உடனே இளைஞர்களுக்கு வேலை உத்திரவாதம் வழங்கி வேலையையும் வழங்க வேண்டும். இல்லையேல் மோடி தன் பிரதமர் பதவி விலக வேண்டும்.
இல்லையேல் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை தமிழக ஆம்ஆத்மி முற்றுகையிடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.