உத்தரகாண்ட்டில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர். வீட்டின் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று, பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கடந்த 2004 – 2005ம் ஆண்டில் என்.டி.திவாரி இங்கு முதல்வராக இருந்தபோது, அமைச்சர் பதவி வகித்தார். ஹல்ட்வானியில் உள்ள தனது வீட்டில் மகன் அஜய் பகுகுணாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, இவருடைய மருமகள் கடந்த புதன்கிழமை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனால், அவமானம் தாங்காமல் பகுகுணா தவித்து வந்தார்.
நேற்று காலை தனது வீட்டின் மேல் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியின் மீது ஏறிய அவர், போலீசாருக்கு 112 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்தார். உடனே, போலீசார் அங்கு விரைந்தனர். அதற்கு முன்பாகவே, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ‘மருமகள் என் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் தற்கொலை செய்யப் போகிறேன்,’ என்று புலம்பினார்.
போலீசார் ஒலி பெருக்கி மூலமாக பேசி, கீழே வரும்படி அவருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர் கீழே இறங்கி வர முயல்வது போல் போலீசாருக்கு தென்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மார்பில் சுட்டுக் கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் அவர் விழுந்து துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து மக்களும், போலீசாரும் அதிர்ந்தனர்.
இது தொடர்பாக பகுகுணாவின் மகன் அஜய் பகுகுணா கொடுத்த புகாரின் பேரில், மருமகள், அவருடைய தந்தை மற்றும் அவர்களை பகுகுணா தாக்கியதாக குற்றஞ்சாட்டிய பக்கத்து வீட்டுக்காரர் உட்பட 3 பேர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.