ஆப்கன் மக்களுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்: அஜித் தோவல்

ஆப்கன் மக்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி அளித்துள்ளார்.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் நான்காவது பிராந்திய பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:-

இந்தியா – ஆப்கன் இடையே பல நுாற்றாண்டுகளாக வரலாற்று ரீதியிலான கலாசார உறவுகள் உள்ளன. அதனால் ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா என்றும் துணை நிற்கும். ஆசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதமும், பயங்கரவாத குழுக்களும் அச்சுறுத்தலாக உள்ளன. அவற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை ஆப்கன் அதிகரிக்க வேண்டும். ஆப்கன் மக்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு உறுப்பு நாடுகள் முன்னுரிமை தர வேண்டும்.

இந்தியா பல ஆண்டுகளாக ஆப்கனுக்கு மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. அத்துடன் அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்களும், இளைஞர்களும் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்.பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து உதவி செய்தால், ஆப்கன் மக்களால், மீண்டும் வளமான, பிரகாசமான நாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இம்மாநாட்டில் ஈரான், ரஷ்யா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களையும் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.