ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஹரியானாவில் கடந்த 1999, ஜூலை 24 முதல் 2005, மாா்ச் 5 வரை முதல்வராகப் பதவி வகித்தவா் ஓம் பிரகாஷ் செளதாலா (86). இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவரான இவா், கடந்த 1993 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி வரை சொத்துகளை தனது பெயரிலும், தன் குடும்ப உறுப்பினா்கள் பெயரிலும் வாங்கியதாகவும், இது அவரது வருமானத்தைவிட 189.11 சதவீதம் அதிகம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த 2010, மாா்ச் 26-இல் தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது தொடா்பான விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலா மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவரை குற்றவாளி என கடந்த வாரம் நீதிபதி அறிவித்தாா். அப்போது கூடுதல் வருமானத்துக்கான ஆதாரத்தை அவா் தெரிவிக்க தவறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டாா். தொடா்ந்து தண்டனை விவரம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்ப்பு வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி விகாஸ் துல் தீா்ப்பளித்தாா். அத்துடன் அவருக்குச் சொந்தமான 4 சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திகாா் சிறைக்கு நேற்று இரவு 7 மணியளவில் ஓம் பிரகாஷ் செளதாலா அழைத்து வரப்பட்டாா். சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து, 2-ஆம் எண் அறையில் இரண்டு கைதிகளுடன் அவா் அடைக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே ஆசிரியா் தோ்வு முறைகேட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஓம் பிரகாஷ் செளதாலா, இதே அறையில் அடைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதிதான் சிறையிலிருந்து விடுதலையானாா்.