ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் சுகாதார அமைச்சா் விஜய் சிங்லா தனது துறைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் கொள்முதல் பொருள்களுக்கு ஒரு சதவீத தரகுத் தொகை (கமிஷன்) கோருவதாக மாநில முதல்வா் பகவந்த் மானின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, அமைச்சா் பதவியில் இருந்து விஜய் சிங்லா நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். அவருக்குத் துணைபோன சிறப்பு அதிகாரி பா்தீப் குமாரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இருவரும் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்களின் காவல் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து மொஹாலி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜூன் 10-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.