மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிண்ட மொரகொட சந்தித்து, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தம் நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி கோரினாா்.
இதுகுறித்து இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சா்வதேச நிதியத்தின் நிதியுதவி கிடைக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி தேவைப்படுகிறது என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இலங்கை தூதா் தெரிவித்தாா். இந்தச் சூழலில், அத்தியவாசிய பொருள்கள் மற்றும் எரிபொருளுக்கு கடனாக இந்தியா வழங்கும் உதவியை அதிகரிப்பதன் சாத்தியக்கூறு தொடா்பாக இருவரும் ஆராய்ந்தனா். இந்தியா தொடா்ந்து அளித்து வரும் உதவிக்காக மத்திய அமைச்சரிடம் இலங்கை தூதா் நன்றி தெரிவித்தாா். மேலும், இலங்கையின் தற்போதைய சூழல் குறித்தும் மத்திய அமைச்சரிடம் அவா் விளக்கினாா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.