மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று, ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). ஐ.டி. ஊழியர். இவரது மனைவி காயத்ரி (39). இவர் அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் அரிகிருஷ்ணன் (9). இவர்களில் நித்யஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், அரிகிருஷ்ணன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றார். இன்று காலையில் அவர்களது வீட்டு கதவு திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் பிரகாசின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் நித்யஸ்ரீ, அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் பிரகாஷ் மனைவி, மகன், மகளை கொன்று தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. முதலில் பிரகாஷ் மனைவி மற்றும் குழந்தைகள் ஒவ்வொருவரின் தலையையும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துள்ளார். இதில் அவர்கள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அதன் பிறகு பிரகாஷ் அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளை பிரகாஷ் ரம்பத்தால் அறுத்து கொன்று தானும் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
பிரகாசுக்கு கடன் தொல்லை இருந்து வந்தது. அவர் பண நெருக்கடியில் சிக்கி தவித்தார். வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லை அதிகரித்ததால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்யலாம் என்று முடிவு எடுத்தார். இது தொடர்பாக அவர் மனைவியிடம் கூறினார். அவரும் கணவரின் முடிவை ஏற்றுக்கொண்டார். இதை நிறைவேற்றுவதற்காக பிரகாஷ் பேட்டரியில் இயங்கும் மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கினார். நேற்று இரவு மகன், மகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் மரம் அறுக்கும் ரம்பத்தால் குழந்தைகளின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்தார். பின்னர் மனைவியையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் அதே ரம்பத்தால் அறுத்து தற்கொலை செய்துள்ளார். இன்று காலையில் போலீசார் வந்து பார்த்த போது பேட்டரியில் இயங்கும் அந்த ரம்பம் இயங்கிக் கொண்டே இருந்தது.
போலீசார் 4 பேரின் பிணங்களையும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொழிச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி இன்று பொழிச்சலுருக்கு சென்றார். அங்கு மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த ஐ.டி. ஊழியர் பிரகாஷ் வீட்டுக்கு சென்று பிணமாக கிடந்தவர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.டி. ஊழியர் பிரகாஷ் பேட்டரியில் இயங்கும் ரம்பத்தால் மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்று தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்த பிரகாஷ் 2 கடிதம் எழுதி ஒன்றை சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார். மற்றொன்றை ஒரு நோட்டுக்குள் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் குழந்தைகளை கொன்று விட்டு, பின்னர் மனைவியை கொலை செய்துள்ளார். அதன் பிறகு தனது வலது கையால் ரம்பத்தை பிடித்து தனது கழுத்தை அறுத்திருப்பது அங்கு பார்த்தபோது தெரிய வந்தது. அது பேட்டரியில் இயங்கும் ரம்பம் என்பதால் பிரகாஷ் இறந்த பிறகும் அந்த ரம்பம் இயங்கிக் கொண்டு இருந்தது.
அந்த ரம்பத்தை கடந்த 19-ந்தேதி அவர் ஆன்லைனில் வாங்கியுள்ளார். எனவே அதற்கு முன்பு அவரது செல்போனில் வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். கடன் தொல்லையா? வேறு ஏதாவது பிரச்சினையா? அல்லது யாராவது அவர்களை தற்கொலைக்கு தூண்டி மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இது தற்கொலை என்றாலும் கொலை என்ற கோணத்தில் தான் எங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். அப்போது தான் பல உண்மையான தகவல்கள் கிடைக்கும். அந்த வீட்டில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் பிரகாசின் கால்தடம் பதிவாகியுள்ளது. கதவும் திறந்தே கிடந்தது. இரவு 11 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது. அவரது வீட்டில் இருந்து 3.50 லட்சம் மதிப்புள்ள கடன் பத்திரம் ஒன்றும் சிக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.