பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை திருவேற்காட்டில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் சிறப்பு தீர்மானம் ஒன்றினை வாசித்த ஜிகே மணி கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட இருப்பதாக தீர்மானத்தை வாசித்தார். நிர்வாகிகளின் ஒப்புதலோடு பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்றாவது தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னாள் தலைவர் ஜிகே மணி, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ” பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். பொன்னாடை அணிவித்து மலர்கொத்து கொடுத்த அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் கட்சி தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பாமக கெளரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதல்வருடனான சந்திப்புக்குப் பின் பேசிய அன்புமணி ராமதாஸ், ” முதலமைச்சர் ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, இதில் அரசியல் எதுவும் பேசவில்லை. புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு என்னை மனதார வாழ்த்தினார். முதலமைச்சரை சந்தித்து தடுப்பணைகள் கட்டுவது குறித்த திட்டத்தை வலியுறுத்தினேன். கால நிலை மாற்றம் குறித்து தொலைநோக்கு பார்வையை முன்வைத்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த 30-40 ஆண்டுகளில் சரி செய்ய முடியும் என்று கூறினேன்” என கூறினார்.