சென்னை அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த வாரம் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயரான பிரவீன் என்பவர் அதிக போதையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இதனைத் மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து போதை விருந்து நிகழ்ச்சி நடத்திய 6 பேரை கைதுசெய்தனர்.
இந்த நிலையில் இந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தன. அவர் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(28), அவர் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகளான சாகுல் ஹமீத் (21),கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்புகள் கைப்பற்றப்பட்டது. அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து நேரில் வரவழைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
கைது செய்யப்பட்ட இளம்பெண் டோக்கஸ் கல்லூரி மாணவி ஆவார். அவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களுக்கு போதை மாத்திரைகள் கிடைப்பது எப்படி? எங்கிருந்து வருகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்போது கைதாகி உள்ள 3 பேரில் ஒருவரான ஸ்ரீகாந்த் என்பவர், ஹைகோர்ட் பிரபல வக்கீல் ஒருவரின் உதவியாளராம். டொக்காஸ் என்ற மாணவி, அடையார் பெட்டிஷன் காலேஜில் எம் ஏ ஆங்கிலம் 2ம் வருடம் படித்து கொண்டு இருக்கிறராம். எங்கெல்லாம் மதுவிருந்து நடக்குமோ, அங்கெல்லாம் இந்த 3 பேரும் வாட்ஸ் அப் க்ரூப் அமைத்து, சம்பந்தப்பட்ட மதுபோதை மற்றும் டிஜே பார்ட்டிகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் கேட்டு போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர். இன்னும் விசாரணை நடக்கிறது.