ஆயுா்வேதம் என்பது வாழ்வின் அறிவியல்: ராம்நாத் கோவிந்த்

நாட்டின் கிராமப் பகுதிகளில் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு மாற்றாக சிறந்த சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை. எனவே, ஆயுா்வேதத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசு ஆயுா்வே கல்லூரியை நாட்டுக்கு அா்ப்பணித்தும், 59-ஆவது அகில இந்திய ஆயுா்வேத மாநாட்டைத் தொடக்கி வைத்தும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

ஆயுா்வேதம் என்பது வாழ்வின் அறிவியல். இந்தியா பாரம்பரிய ஆயுா்வேத மருத்துவ முறையை கொண்ட கிராமங்களின் நாடாகத் திகழ்கிறது. கிராமப் பகுதிகளில் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு சிறந்த மாற்று இதுவரை ஊருவாகவில்லை. எனவே, ஆயுா்வேத மருத்து முறையில் ஆராய்ச்சியை மேலும் ஊக்குவிப்பதோடு, ஆவணப்படுத்துதல், மதிப்பீடு செய்தல் என்று இந்த இந்திய மருத்துவ முறையை பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளை அந்த துறை சாா்ந்த நிபுணா்கள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா சோதனை காலத்தில் ஆயுா்வேத மருத்துவ நிபுணா்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பலரின் உயிா்களை அவா்கள் காத்தனா்.

மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவ வசதிகள் மற்றும் ஆயுா்வேத சிகிச்சை முறைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில ஆளுநா் மங்குபாய் படேலும், முதல்வா் சிவ்ராஜ் சிங் செளஹானும் மேற்கொண்டு வருகின்றனா். நாட்டின் ஆயுா்வேத சிகிச்சை முறையின் மையமாக இந்த மாநிலம் உருவாக வேண்டும். இவ்வாறு குடியரசுத் தலைவா் கூறினாா்.