மோடி பிரதமரான பின்னர் முதன் முறையாக நிலக்கரியை மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதனால் வரும்காலங்களில் மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமும், மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக நிலக்கரி இறக்குமதி செய்கிறது. கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றப் பின்னர், முதன் முறையாக நிலக்கரி இயக்குமதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்னை உள்ள நிலையில், நிலக்கரி நெருக்கடியை சமாளிக்க வேண்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால் பல மாநிலங்கள் இருளில் மூழ்கின. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்காகவும், நிலக்கரி இருப்பை அதிகரிக்கவும் நிலக்கரி இறக்குமதியை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய மின்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “கோல் இந்தியா நிறுவனம் ஜி2ஜி என்ற அடிப்படையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியானது, அரசின் அனல் மின் நிலையங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு சப்ளை செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி செய்யும் விஷயத்தில், சில மாநிலங்கள் தாங்களாகவே நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தனித்தனியாக நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பான டெண்டர்களை வெளியிட திட்டமிட்டிருந்தன. ஆனால், இதுபோன்று செய்தால் பெரும் குழப்பம் ஏற்படும் என்றும் சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தன. அதனால், கோல் – இந்தியா நிறுவனம் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.