கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் எனப்படும் வைரஸ் பரவி வருகிறது. கொசுக்கள் மூலமாக பரவும் இந்த வகை வைரஸ் காய்ச்சலுக்கு அம்மாநிலத்தின் திருச்சூர் நகரைச் சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சூரை சேர்ந்த ஜோபி என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவியது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, திருச்சூரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
குலெக்ஸ் என்றழைக்கப்படும் வகை கொசுக்கள் மூலமாக இந்த வகை காய்ச்சல் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநில சுகாதாரத் துறையினர் வெளியயிட்டுள்ள அறிக்கையில், ‘ 80 சதவீத மக்களுக்கு இந்த வகை காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளை மொய்க்கும் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகின்றன’ இவ்வாறு அறிவிக்கப்ட்டுள்ளது.
கியுலெக்ஸ் என்ற கொசுவின் மூலம் தான் மனிதர்களுக்கு நெஸ்ட் நைல் காய்ச்சல் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டால் தலைவலி, வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். கவனிக்காமல் விட்டால் மூளையை பாதித்து பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
இது குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்களால் பரவும் நோய் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இந்த நோய் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.