படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை எனத் தன்னிச்சையாக கருத்து தெரிவித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
“நரிக் குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் போன்ற சமுதாயத்தினர் 15 இலட்சம் பேர் பயனடைய பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்து அவர்களின் வாக்குறுதிகளை பெற்று தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இன்று “படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை” என்று தன்னிச்சையாக சொல்வது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறி, மாறி பேசும் இரட்டை நாக்கை உடைய கட்சி தி.மு.க. என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். பழமைவாய்ந்த விசேஷ குணம், தனித் தன்மை வாய்ந்த கலாச்சாரம், பெரும்பாலும் பொதுமக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூச்சப்படும் மனப்பான்மை, வாயிலாக மாண்புமிகு பாரதப் பிரதமரை வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அண்மையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் அவர்கள் ‘படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை’ என்று கூறியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற படுகர் இன மக்களின் கோரிக்கை பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் “அதற்கு வாய்ப்பில்லை” என்று கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. ஒருவேளை, அடிப்படையே இல்லாமல் கருத்து கூறுவதுதான் ‘திராவிட மாடல்’ போலும்!
படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ள நிலையில், இந்தக் கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், எந்த அடிப்படையில் ‘அதற்கு வாய்ப்பில்லை’ என்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் அவர்கள் சொல்கிறார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, ‘படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை” என்று மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள் தன்னிச்சையாக கூறியதைக் கண்டிக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.