விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தி.மு.க. அரசு புதிதாக பல பொருட்களை 1987-ம் ஆண்டைய தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்த்து அதை கடந்த 25-ந் தேதி நாளிட்ட அரசிதழ் எண் 21-ல் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி, எல்லா வடிவ தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, குதிரைவாலி, வரகு, சாமை, எல்லா வடிவ பயிறு வகைகளான உளுந்து, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி, கொள்ளு, எண்ணெய் வித்துகள், தேங்காய் நார் போன்ற நார் பொருட்கள், கிழங்கு வகைகள், சுவையூட்டும் பொருட்கள் மற்றும் நறுமண பொருட்கள், அனைத்து வகை கரும்பு வெல்லம், பனை வெல்லம், கச்சா ரப்பர், பூண்டு, மிளகாய் வற்றல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதவிர ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியே விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கும் ஒரு சதவீத சந்தை வரி விதிக்கப்பட்டிருப்பதாகவும் வியாபாரிகளும், வணிக சங்கங்களும் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளும், பொருட்களை வாங்கும் வியாபாரிகளும்தான். இதன் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசின் இதுபோன்ற நடவடிக்கை வியாபாரிகள், விவசாயிகளின் வருமானத்தை குறைக்கவே வழிவகுக்கும். இது வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் பாதிக்கும்.
தி.மு.க. அரசின் வணிக விரோத கொள்கைக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருத்தில் கொண்டு புதிதாக எந்த விளைபொருளையும் ஒரு சதவீத சந்தை நுழைவு வரிக்கு உட்படுத்தாமல் இருக்கவும், பிற மாநிலங்களில் உள்ளது போன்று ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்துக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.